Vignesh Puthur: மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதூர், தனது ஐபிஎல் அறிமுகத்திலேயே அனைவரையும் கவர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபே ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மாவுக்கு பதிலாக விக்னேஷை இம்பாக்ட் வீரராக தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு 156 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. முதல் ஏழு ஓவர்களில் சிஎஸ்கே அணி அதிரடியாக ஆடி ஒரு விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. 8வது ஓவரில் விக்னேஷ் புத்தூர் பந்து வீச வந்தார். அவர் அரை சதம் அடித்திருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை அந்த ஓவரில் வீழ்த்தினார். அடுத்து 10வது ஓவரில் சிவம் துபே விக்கெட்டையும், 12 வது ஓவரில் தீபக் சாஹர் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆட்டம் முடிந்ததும் விக்னேஷைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டியிருக்கிறார் தோனி.
கேரளாவின் மலப்புரம் பெரிந்தல்மன்னா என்ற பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதூர், மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.30 லட்சத்திற்கு அடிப்படை விலையாக ஏலத்தில் வாங்கப்பட்டார். இந்த இளம் வீரர் இதுவரை சீனியர் மட்டத்தில் கேரளாவுக்காக விளையாடவில்லை, உள்ளூர் கிரிக்கெட் பயிற்சியாளர் விஜயன் என்பவரிடம் பயிற்சி பெற்ற விக்னேஷ், U-14 மற்றும் U-19 மட்டங்களில் விளையாடியுள்ளார். அவர் தற்போது கேரள கிரிக்கெட் லீக்கில் ஆலப்பி ரிப்பிள்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் தமிழ்நாடு பிரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார்.
ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநரின் மகனான இவர், முதலில் மிதவேக பந்துவீச்சாளராகவும், சாதாரண சுழற் பந்துவீச்சாளராகவும் இருந்தார். அதன் பின்னர் லெக் ஸ்பின்னராக மாறினார். அவருக்கு இன்னும் “சைனா மேன் பௌலிங்” எப்படி வீசுவது என்பதும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, அவர் திருச்சூருக்குச் சென்று செயிண்ட் தாமஸ் கல்லூரிக்காக கேரள கல்லூரி பிரீமியர் டி20 லீக்கில் ஒரு பெரிய நட்சத்திரமாக மாறியதால், அது அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியது.