சென்னை மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகள் நடைபெறுகின்றன. இதே மைதானத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக கடும் வெயிலில் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் சதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மனதிலும் உள்ளது.
இந்திய அணிக்கான முதல் டெஸ்ட் வெற்றி, இந்தியாவின் முக்கிய தொடராக பார்க்கப்படும் ரஞ்சி கோப்பை தொடரின் முதல் போட்டி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடைபெற்று உள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளும், 23 ஒரு நாள் போட்டிகளும், 2 டி20 போட்டியும் நடைபெற்று உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரை துவக்க காலத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், கடந்த 1980-களுக்கு பிறகு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு மைதானமாகவே உள்ளது. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக கபில்தேவ் மட்டுமே உள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை பொறுத்தவரை பழைய சேப்பாக்கம் மைதானம் போல பந்து ஸ்பின் ஆகவில்லை என்றாலும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவே தற்போது மைதானம் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் உள்ளது. இதன் காரணமாகவே கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத ஒரு நிகழ்வாக இந்த மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தங்களது போட்டியை நடத்தினால் அது அந்த அணிக்கு முழுமையாக சாதகமாக இருக்கும் என கூறி பாகிஸ்தான் அணி, ஒரு அதிர்ச்சி கடிதத்தை எழுதினர். இருப்பினும் அந்த கோரிக்கையை தற்போது ஐ.சி.சி மறுத்துள்ளது.
ஒரு நாள் போட்டியை பொறுத்தவரை புதிய பந்தாக இருக்கும் நேரத்தில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகவும், பின்னர் மைதானத்தில் வேகம் குறைய குறைய பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக மைதானம் இருக்கும் என்பதால் போட்டி ஒரு பக்கம் சாயாமல் இரண்டு தரப்பிற்கும் வாய்ப்புகள் இருக்கும் என பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உலக கோப்பையில் இந்தியா வெற்றிபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் அணி பயிற்சியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சேலத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு பயிற்சி ஆலோசனை அளிக்க வந்துள்ள தமிழ்நாடு கிரிக்கெட் அணி பயிற்சியாளர் வெங்கட்ராமன் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சென்னை மைதானம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இதில், முதல் 10 ஓவரையும், கடைசி 10 ஓவரையும் சிறப்பாக கையாளும் அணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கும். இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும், அதற்கான நம்பிக்கை இந்திய வீரர்களிடம் இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.