அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியே அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.. அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான பண்ருட்டிராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமித்துள்ளதாக நேற்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்..ஆனால் பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஓபிஎஸ்-ன், இந்த நியமனத்தின் பின்னணியில் நிறைய அரசியல் லாபம் இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மிக சிறந்த அரசியல் தலைவராகவே பண்ருட்டி கருதப்படுகிறார்.. எனவே அவரை போன்றோர் தன்னுடன் இருப்பதால் கட்சி மீண்டு வரும், தொண்டர்களிடம் ஒரு நம்பிக்கை ஏற்படும் என்று ஓபிஎஸ் கருதுகிறாராம்.. மேலும் அதிமுகவில் உள்ள சிக்கல்கள் தீரும் என்ற நம்பிக்கையில் பண்ருட்டி அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சீனியர்களுக்கு முக்கிய பதவி தருவதன் மூலம், வன்னியர்களின் ஆதரவை பெற முடியும் என்றும் ஓபிஎஸ் தரப்பு நம்புகிறது. பண்ருட்டி நியமனத்தில் பாஜகவின் அரசியலும் இருப்பதாக கூறப்படுகிறது.. அதாவது, ஓபிஎஸ் ஏற்கனவே சசிகலா, தினகரனை ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்த நிலையில், இவர்களுடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் இணையும் பட்சத்தில், புது டீம் உருவாக வாய்ப்புள்ளது..
எனவே, பண்ருட்டியார் போன்றோரை கட்சி சேர்ப்பது, கட்சி மோசமான சூழலை எதிர்கொண்டிருக்கும் இந்த வேளையில், தகுந்த ஆலோசனைகளை வழங்க பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற மூத்த தலைவர்களுக்கு பொறுப்பு வழங்கிய ஓபிஎஸ்-ஐ ஒரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்..
ஆனால் மறுபுறம், எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு விமர்சனங்கள் எழத்தொடங்கி உள்ளன.. இப்படி கட்சியில் இருந்துஅனைவரையும் நீக்குவது சரியான முடிவல்ல என்றும், கடைசியில் யாரை வைத்து எடப்பாடி கட்சி நடத்தப் போகிறார் என்பது போன்ற கேள்விகளும் எழத் தொடங்கி உள்ளன.. இதில் ஓபிஎஸ் பண்ருட்டியை பயன்படுத்தி கொள்ள போகிறாரா அல்லது பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த பதவியை பயன்படுத்தி கொள்ள போகிறாரா என்பது தெரியவில்லை.. மேலும் பாஜகவின் பிளான் எந்த அளவுக்கு கைக்கொடுக்கும் என்பதும் போக போக தான் தெரியும்..