ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாவது குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், ”நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர், இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக அடுத்த 4 தினங்களுக்கு வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களிலும், ராமநாதபுரத்திலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நவம்பர் 26ஆம் தேதி மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகையில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும் அரியலூர், தஞ்சை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாவது குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும். புயலைப் பொறுத்தவரை, கடலின் வெப்பநிலை, காற்று, காற்று விரிவடையும் தன்மை, மத்திய பகுதியில் ஈரப்பதம் செல்வது மற்ற நிகழ்வுகள் இவையெல்லாம் சேர்ந்துதான் முடிவு செய்யப்படும். இதனால் புயல்கள் ஒவ்வொன்று மாறுபட்ட தன்மைக் கொண்டவை. எனவே, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : சென்னையில் வேலை..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!