தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் கடலூர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், அதற்காக கடலூர் மாவட்டத்தை தயார்படுத்துவதற்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின் எங்களை இங்கு அனுப்பியுள்ளார். பொதுவாக கடலூர் மாவட்டம் மழை, வெள்ளம், புயல் போன்றவற்றால் அதிகம் பாதிக்கக்கூடிய மாவட்டமாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதி, குறைவாக பாதிக்கக்கூடிய பகுதி என்று மொத்தம் 228 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மொத்தம் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தங்குவதற்காக திருமண மண்டபங்கள், பள்ளிகள், கல்லூரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள 1077 என்ற தொலைபேசி எண் உள்ளது. இதுபோக கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் சுமார் 5000 பேருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக மேலும் 2000 மீட்பு படையினர் தயாராக உள்ளனர். எனவே, இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இதில் தமிழகத்தில் இதுவரை விளிம்பு நிலையில் உள்ள 1.50 லட்சம் பேருக்கு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதுபோக கடலூர் மாவட்டத்தில் 6,241 பேருக்கு எஸ்டி சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் மூன்றரை லட்சம் முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டு பரிசீலனை செய்து தகுதியுள்ள நபர்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 34 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 681 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.