கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த புஞ்சை கடம்பக்குறிச்சியைச் சேர்ந்தவர் 30 வயதான ரமேஷ். திருமணம் ஆகாத இவர், வரன் பார்ப்பதற்காக, கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி மற்றும் தேவகோட்டையைச் சேர்ந்த பாலகுமார் ஆகியோரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கூறியுள்ளார். இதனையடுத்து, இவர்களது ஏற்பாட்டில், கோவை மாவட்டம், ராமநாதபுரம், போத்தனூர் சாலையைச் சேர்ந்த 36 வயதான ரேணுகா என்பவருடன் ரமேஷுக்கு திருமணம் முடிந்துள்ளது. திருமணத்தின் போது, தனது மனைவி ரேனுகாவிற்கு 6 சவரன் தாலிச் சங்கிலி, 1 பவுன் தோடு, அரை பவுன் மோதிரம் போட்டுள்ளார். மேலும், திருமனத்திற்காக 4 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.
இந்நிலையில், திருமணம் முடிந்த மறுநாள், ரமேஷிற்கு ரேணுகாவின் உடலில் சில மாற்றங்கள் தெரிந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த ரமேஷ், இது குறித்து ரேணுகாவிடம் கேட்டுள்ளார். அதற்கு, ரேணுகா கூறிய காரணதை ரமேஷால் நம்ப முடியவில்லை. இதனால், ரேணுகாவை ரமேஷ் கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரேணுகாவிற்கு செல்போனிற்கு பழனிகுமார் என்பவர் அழைத்துள்ளார். அப்போது அவர், ரேணுகா தான் பேசுகிறார் என நினைத்து, பணம், நகைகளை எடுத்து வருவதாகக் கூறிவிட்டு, இன்றும் ஏன் எடுத்து வரவில்லை என கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், இது குறித்து அவரது மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்போது, ரேணுகாவிற்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த மெய்யர் என்பவருடன் திருமணம் நடந்து, இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பழனிகுமார் என்பவருடன் மூன்று வருடம் தொடர்பில் இருந்ததும், கோவை ராஜ், முபாரக் ஆகியோருடன் ஒரு வருடம் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. பின்னர், அவர் கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அது மட்டும் இல்லாமல், அவர் தனது இரண்டாவது கணவரிடம் இருந்து பணம், நகைகளை எடுத்து வந்துவிட்டதாகவும், அதே தரகர்கள் மற்றும் திருமண மோசடி கும்பல் மூலம் தான் ஏமாந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். ஆனால், இதனைத் தெரிந்து கொண்ட ரேணுகா, ரமேஷ் கொடுத்த தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து, ஜெகநாதன் என்ற நபர் ஒருவர் ரமேஷை அலைபேசியில் தொடர்பு கொண்டு, 20 லட்சம் பணம் மற்றும் 20 பவுன் நகையும் கொடுகைவிட்டால் வரதட்சனை கொடுமை செய்ததாக புகார் அளிப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, ரமேஷ் உடனடியாக சம்பவம் குறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ரேணுகாவை தேடி வந்த போலீசார், கோவை செல்ல கரூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த ரேணுகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மோசடி கும்பலையும் போலீசார் தேடி வருகின்றனர்.