கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா என்ற பகுதியில் தேசிய விளையாட்டு பூங்கா ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்வது வழக்கம் இத்தகைய நிலையில், அந்த பூங்காவில் சென்ற 30ம் தேதி இரவு இளம்பெண் ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த ஒரு நபர் இரவில் தனியாக பேசுவதை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அங்கிருந்து இருவரும் வெளியேறியுள்ளார்கள். உடனடியாக அவர்களை தண்டித்த அந்த நபர் தன்னுடைய 3 நண்பர்களை கைபேசியில் அழைத்துள்ளார், அவர்கள் தயாராக இருந்திருக்கிறார்கள். நான்கு பேர் கொண்ட அந்த கும்பல் அந்தப் பெண்ணின் ஆண் நண்பரை தாக்கி விட்டு அந்த பெண்ணை கடத்திச் சென்றனர். மேலும் ஓடும் காரில் அந்த பெண்ணை விடிய, விடிய கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அதன் பிறகு அதிகாலையில் அந்த பெண்ணை அவருடைய வீட்டின் அருகில் இறக்கி விட்டு விட்டு இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.பலாத்க்காரம் செய்யப்பட்டு காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், காவல்துறையில் புகார் வழங்கியிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பின்னர் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.