செல்போனால் அழிந்து போகும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வாழப்பாடியில் தற்போது நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பொன்னுவேல் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். வசந்தி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை வசந்தியின் கணவர் மற்றும் மகன்கள் கவனித்துள்ளனர். இதனால் மூவரும் இனி செல்போனில் அடிக்கடி பேசக்கூடாது என்று கண்டித்துள்ளனர்.
இதனால் கணவன் மற்றும் மகள்கள் வசந்தியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். ஆனால் யார் சொல்வதையும் கண்டுக்கொல்லாத வசந்தி, தொடர்ந்து செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று, வழக்கம் போல் வசந்தி செல்போனில் பேசியுள்ளார். இதையடுத்து, அவரது கணவன் மற்றும் மகன்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மூவரும், வசந்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். கணவன் மற்றும் மகன்கள் தாக்கியதில் படுகாயமடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னுவேல் மற்றும் அவரது மகன்கள் வசந்தியை வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், பொன்னுவேல் மற்றும் அவரது இரு மகன்களையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வசந்தி யாரிடமோ அடிக்கடி செல்போனில் பேசியதை தவறாக நினைத்து இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. செல்போனால் ஒரு குடும்பமே நிலைகுலைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.