பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வந்த தொகையை எடுத்துக்கொண்டு நான்கு பெண்கள் அவர்களது காதலர்களுடன் ஓடிசென்ற சம்பவம் உத்திர பிரதேசம் மாநிலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் உயரிய நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி ஒருவருக்கு வீடு கட்ட 2 லட்சம் ரூபாய் மானியமாக அரசாங்கத்திலிருந்து கொடுக்கப்படும். இந்த இரண்டு லட்ச ரூபாய் ஆனது நான்கு தவணைகளாக பிரித்து ஒவ்வொரு நிலையிலும் 50 ஆயிரம் ரூபாய் என குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்நிலையில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வந்த பணத்தை எடுத்துக் கொண்டு தங்கள் காதலர்களுடன் ஊரைவிட்டு ஓடிய சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில்அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்திர பிரதேசம் மாநிலத்தின் பரப்பன்ஹி மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களுக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி இந்த கிராமங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு முதல் தவணை ஆக 50 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்கள் தங்களதுவீடு கட்டும் பணிகளை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வீடு கட்டும் பணிகள் தொடர்பான ஆய்வினை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். அப்போது பல்ஹரா,பன்ஹி,சைதம்பூர் மற்றும் சிதாகூர் கிராமங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் நிதி பெற்றுக் கொண்ட நான்கு வீடுகளின் கட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
இதனை அடுத்து அரசு அதிகாரிகள் அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து இருக்கின்றனர். அப்போது அவர்களுக்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஏன் இன்னும் வீடு கட்டும் பணிகளை தொடங்கவில்லை என சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது அரசு தரப்பு. இந்த நோட்டீசை பெற்றுக் கொண்ட கணவன்மார்கள் நேரடியாக அரசு அலுவலகம் வந்து தங்களது மனைவிகளை காணவில்லை என்றும் இதனால் இரண்டாவது தவணையான ஐம்பதாயிரம் ரூபாயை அவர்களது வங்கி கணக்குக்கு அனுப்ப வேண்டாம் என்றும் புகார் செய்தனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தவர்கள் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக வந்த ஐம்பதாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தங்கள் மனைவிமார்கள் அவர்களது காதலர்களுடன் தலைமறைவாகி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டாவது தவணை பணத்தை அவர்களது வங்கி கணக்கில் செலுத்த வேண்டாம் என கோரிக்கையும் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நான்கு பெண்களையும் தேடி வருகின்றனர். மேலும் அரசு அதிகாரிகள் இவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகையை எவ்வாறு மீட்பது என ஆலோசித்து வருகின்றனர்.