சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு போலீஸ்காரர் ஒருவர் தனது மகளுடன் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை ஓட்டேரி காவல்நிலையத்தில் ஏட்டுவாக வேலை பார்த்து வருபவர் கோதண்டபாணி. இவரது 8 வயது மகள் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், மகளை சேர்த்த நிலையில், அங்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், சிறுமியின் வலது கால் அழுக ஆரம்பித்துள்ளது. ஒருகட்டத்தில் காலை அகற்ற வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகித்திடம் போலீஸ்காரர் கேள்வி எழுப்பிய நிலையில், அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லையாம். இதனால் மனம் நொந்துபோன கோதண்டபாணி, கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை பட்ஜெட் நேரத்தில் தன்னுடைய மகளுடன் தலைமைச் செயலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதனல், அனைவருமே பதறிப்போனார்கள்.
இது சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்திற்கு சென்ற நிலையில், இதுகுறித்து குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால், எந்த குழுவும் கடைசிவரை அமைக்கப்படவில்லையாம். ஏற்கனவே நொந்து போயிருந்த கோதண்டபாணி, நேற்று (ஆகஸ்ட் 15) மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டார். தன்னுடைய மகளுடன் டிஜிபி அலுவலகத்திற்கு வந்த அவர், திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கோதண்டபாணி, “இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 77-வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். ஆனால், என் மகளுக்காக இரண்டு வருடங்களாக நான் போராடி வருகிறேன். நீதி கிடைக்கவில்லை. குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். ஆனால், எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. 4 மாதங்களுக்கு பிறகு மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவதாக குழந்தைகள் நல ஆணையம் சொல்கிறது.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்தது குறித்து, எந்தவொரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை. அவர்களிடம் இருந்து விளக்கம்தான் தேவையே தவிர, மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் தேவையில்லை. என் மகளுக்கு ஊனமுற்றோர் சான்றிதழ் தருவதாகவும், பென்ஷன் தருவதாகவும் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? குழந்தையை ஊனமாக்கிவிட்டு, ஊனமுற்றோர் சான்றிதழ் தருவதாக சொல்வது சரியா? இதுதான் இந்தியாவின் நிலைமையா? இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் என்னையும், என் மகளையும் கருணை கொலை செய்துவிடுங்கள்“ என்று கண்ணீர் மல்க கூறினார்.