உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்து தனது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி.
லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை டிராவிஸ் ஹெட்டும், ஸ்டீவ் ஸ்மித்தும் இந்திய பவுலர்களை பதம் பார்த்தனர். 25 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் டிராவிஸ் ஹெட் மட்டும் 163 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 19 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் குவித்தார். பவுலிங்கை பொறுத்தவரை முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமியும், ஷர்துல் தாக்குரும் தலா 2 விக்கேட்டுகளையும் கைப்பற்றியிருந்தர். ரவீந்தர ஜடேஜா தனது பங்குக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் உமேஷ் யாதவ் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.
இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை இந்திய அணி தொடங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரகளிலேயே பெவிலியன் திரும்பினர். இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய புஜாரா மற்றும் கோலியும் பெரிதாக சோபிக்கவில்லை. இந்திய அணியை பொறுத்தவரை ரஹானே, ஜடேஜா கூட்டணிதான் சற்று பொறுப்பாக ஆடி ரன்களை உயர்த்தியது. அதிலும் அரை சதத்தை எட்ட இருந்த நிலையில் 48 ரன்களுக்கு ஜடேஜா ஆட்டம் இழந்தார்.
ஜடேஜாவை அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பாரத் 5 ரன்களில் நடையை கட்ட ஷர்துல் தாகுர் , ரஹானேவுடன் கைகோர்த்தார். இந்த ஜோடி சற்று நிலைத்து ஆடியதில் அணியின் ஸ்கோர் 261 ரன்களை எட்டிய நிலையில் ரஹானே 89 ரன்கள் சேர்த்த போது ஆட்டம் இழந்தார். இவரை அடுத்து ஷர்துல் தாக்குர் அரை சதத்தை நிறைவு செய்த நிலையில் 51 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பிறகு இந்தியா தனது முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுருண்டது. பவுலிங்கை பொறுத்தவரை ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட்,கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை 173 ரன்கள் முன்னிலையுடன் மூன்றாவது நாளில் டி பிரேக்கிற்கு முன் தொடங்கியது. அணி 2 ரன்கள் எட்டிய நிலையில் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தி முகமது சிராஜ் அதிர்ச்சி கொடுத்தார். இவரை தொடர்ந்து கவாஜா 13 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஸ்ரீகர் பாரத்திடன் கேச் கொடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களுக்கு இந்திய பவுலர்கள் அதிர்ச்சி கொடுத்தாலும் அதன் பின் களம் இறங்கிய மார்னஸும், ஸ்டீவ் ஸ்மித்தும் சற்று நிலைத்து ஆடினர். மூன்றாவது விக்கெட்டாக ஸ்மித் 34 ரன்களுக்கு அவுட் ஆக, மார்னஸ் 41 எடுத்திருந்த போது உமேஷ் யாதவ் பந்தில் புஜாராவிடம் கேச் கொடுத்து அவுட் ஆனார்.
முதல் இன்னிங்ஸில் இந்திய பந்து வீச்சாளர்களை நொறுக்கித்தள்ளிய டிராவிஸ் ஹெட்டையும், கேமரூனையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க செய்து ஜடேஜா ஆறுதல் கொடுத்தார். இந்த நிம்மதி சற்று நேரம் தொடர்வதுக்குள் அலெக்ஸ் கேரியும் மிட்செல் ஸ்டார்க்கும் கை கோர்த்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக உருவெடுத்தனர். இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க் 7 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்தில் விராட் கோலியிடம் கேச் கொடுத்து அவுட் ஆனார். அலெக்ஸ் கேரி 8 பவுண்டரிகளுடன் 66 ரன் எடுத்த நிலையில் களம் இறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார். அப்போது 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்களை எட்டியிருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. இதன்படி இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அணி 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.