உலகின் மிகப்பெரிய இணையதள நிறுவனமான கூகுள் நிறுவனம் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறது. தங்களது பயனர்களுக்கு அவ்வபோது புதிய அப்டேட்டுகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில், விரைவில் அறிமுகம் ஆக உள்ளது ஹெல்ப் மி ரைட் என்ற AI வசதி. ஹெல்ப் மி ரைட் என்றால் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடந்த புதன்கிழமை கூகுள் I/O-2023 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில், வரும் காலத்தில் கூகுள் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தை எப்படி எல்லாம் பயன்படப்போகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுச் சோதனையில் இருக்கும் ஒரு அம்சத்தைப் பற்றிக் கூறினார் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. அது தான் ‘ஹெல்ப் மி ரைட்’ அம்சம். AI உதவியுடன் இந்த அம்சம் செயல்படும். இது நமது வேலைகளை மிகவும் சுலபமாக்கிவிடும்.
உதாரணத்திற்கு, நீங்கள் பயணம் செய்யவிருந்த விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்கான வவுச்சருடன் உங்களுக்கு ஒரு இ-மெயில் வருகிறது. அதற்கு நீங்கள் பதில் மெயில் அனுப்ப வேண்டும். விமான நிறுவனம் உங்களுக்கு அளித்திருக்கும் சலுகைக்கு மாறாக வேறு ஒன்று விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு வந்த இ-மெயிலை மேற்கோள் காட்டி, உங்கள் விருப்பத்தையும் பதிவு செய்தால் போதும். உங்கள் விருப்பத்தோடு உங்களுக்கான பதில் மெயிலை ஹெல்ப் மி ரைட்-டே எழுதிவிடும்.
மேற்கோள் காட்டப்பட்ட மெயிலில் இருந்து உங்கள் டிக்கெட் விவரங்கள், பயண தேதி, நேரம், ரத்து செய்யப்பட்டதற்கான காரணம், நிறுவனம் வழங்கிய சலுகை உள்ளிட்ட விவரங்களைத் தானே அமைத்து முறையான பதில் மெயிலை சில நொடிகளில் ஹெல்ப் மி ரைட் எழுதி விடும். ஏற்கனவே ஸ்மார்ட் ரிப்ளை, ஸ்மார்ட் கம்போஸ் உள்ளிட்ட வசதிகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், இந்த புதிய அம்சம் இப்போது சோதனை அளவில் இருப்பதாகவும், ஜூன் மாதம் முதல் இந்த வசதி ஜி- மெயில் பயனர்களுக்குக் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.