சென்னையில் நேற்று காலை 6 மணி முதல் 7:10 வரையிலான நேரத்தில் மட்டும்சைதாப்பேட்டையில் துவங்கி வேளச்சேரி வரை, 6 பெண்களிடம் 22 சவரன் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மும்பையை சேர்ந்த ஜாபர் குலாம் ஹூசைன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே, திருடிய நகைகளை மீட்க சென்ற போது, போலீசாரை தாக்கி ஜாபர் தப்ப முயற்சி செய்தார்.
விமான நிலையத்தில் நேற்று காலை கைது செய்யப்பட்டவரை, விசாரணைக்குப் பிறகு தரமணி ரயில் நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்க போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு அவர் தப்ப முயன்ற போது, காவல் ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாபர் மீது நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் கூறுகையில், ”சென்னையில் 6 இடங்களில் செயின் பறித்து, மும்பைக்கு விமானம் மூலம் தப்பச் செல்ல திட்டமிட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், ரயிலில் தப்பியோடிய மற்றொருவரை ஆந்திராவில் பிடித்தனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய பைக்கை அடையாளம் காட்டுவதற்காக அழைத்துச் சென்றபோது, அவர்கள் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட்டனர். பின்னர், தற்காப்புக்காக, போலீசார் பதிலுக்கு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜாஃபர் இரானி உயிரிழந்தார்.
மேலும், கைதான கொள்ளையர்களிடம் இருந்து 26 சவரன் மதிப்புள்ள 6 செயின்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளையர்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள். 3 பேர் கைதாகியுள்ள நிலையில், இவர்களில் ஒருவர் முன்கூட்டியே தமிழ்நாட்டிற்கு வந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். ஒவ்வொரு குற்றத்திற்கு பிறகும் இந்த கொள்ளையர்கள் உடைகளை மட்டுமே மாற்றியுள்ளனர். ஆனால், காலணியை மாற்றவில்லை. அதனால்தான் அவர்கள் எளிதாக பிடிபட்டனர்” என்று கூறியுள்ளார்.
Read More : நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி..!! பாரதிராஜாவுக்கு ஆறுதல்..!!