பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்தது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்தது. அந்த வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தன் வாதத்தில் கூறியிருப்பதாவது:- பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்தது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். ஆன்லைன் விளையாட்டுகளை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும்.
ஆன்லைன் ரம்மியில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடுவோரின் அறிவுத்திறன் சரிபார்க்கப்படுவது எப்படி என்பதை அந்த நிறுவனங்கள் விளக்கவில்லை. ஆன்லைன் ரம்மியில் வென்ற பணம் முழுவதையும் பெற முடியாது.
ஆன்லைன் விளையாட்டில் பரிசு பெறுவோருக்கு கிடைக்கும் பரிசுத் தொகையில் ஒரு பகுதி நிறுவனத்திற்கு செல்கிறது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் முன்வைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.