பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததால் இளம் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக தப்பி ஓடிய பெண்ணின் தந்தையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா. இவரும் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞரும் சிறு வயது முதலே ஒன்றாக படித்து வந்துள்ளனர். முன்னிலையில் இவர்களிடையே காதல் மலர்ந்து இருக்கிறது. நவீன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர்.
காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்ததை தொடர்ந்து டிசம்பர் 31ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. ஐஸ்வர்யா மற்றும் நவீன் இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இவர்களது திருமண வீடியோ வாட்ஸ் அப் மூலமாக பரவியதை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஐஸ்வர்யாவை அவரது தந்தை அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி ஐஸ்வர்யாவை கொலை செய்து விட்டதாக நவீனுக்கு தகவல் கிடைத்தது. தொலைத்தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் கொடூரமாக கொலை செய்து எரித்தது தெரிய வந்திருக்கிறது. இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாக இருக்கும் ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாளை தேடி வருகின்றனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்ததால் இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.