மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த பெண் தலைநகர் டெல்லியில் தனது நண்பரால் அடைத்து வைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு சூடான பருப்பை அவரது உடலில் ஊற்றியும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் குற்றச் செயலில் ஈடுபட்ட நபரின் பெயர் பரஸ் என்று தெரிய வந்திருக்கிறது. 28 வயதான அந்த இளைஞர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் செல்போனில் பேசுவதன் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்தப் பெண்ணிற்கு பெங்களூரில் வேலை கிடைத்ததை தொடர்ந்து டெல்லி வழியாக பெங்களூர் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை டெல்லியில் சந்தித்த பராஸ் பெங்களூர் செல்ல வேண்டாம் இங்கேயே நல்ல வேலை கிடைக்கும் என்று கூறி தன்னுடன் தங்க வைத்திருக்கிறார். இதன் பிறகு அந்த பெண்ணை பாலியல் ரீதியாக அவன் கொடுமை செய்ததோடு உடல் ரீதியான துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளார்.
அந்தப் பெண்ணை கொடூரமாக அடித்து உதைத்து தாக்கியதோடு சூடான பருப்பை அவரது உடலில் ஊற்றி கொடுமைப்படுத்தியதும் காவல்துறையில் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 376 (கற்பழிப்பு) மற்றும் 377 (சோடோமி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.