ஜாமீனுக்குப் பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜாமீனில் வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து, அடுத்த சில தினங்களிலேயே மின்சாரத்துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்திருந்தது. மேலும், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீனுக்கு பின் செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இன்னும் 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அவகாசம் வழங்கப்படாது” என்று நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, செந்தில் பாலாஜி பதில்மனு தாக்கல் செய்யவில்லை என்றால், அவருடைய ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கைதாக வாய்ப்புள்ளது.