2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ தமிழ்நாட்டு பேரவைக்கான பொதுத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளிக்க உள்ளோம்.. குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 வழங்கப்படும்.. இந்த பணம் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
நகரப் பேருந்துகளில் பயணிக்கும் ஆண்களுக்கும், கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும். மகளிருக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும்.
அம்மா இல்லம் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் குடியிருப்போருக்கு அரசே இடம் வாங்கி காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும். நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி வீடுகள் கட்டித்தரப்படும். 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும். அம்மா இருசக்கர வாகனம் திட்டம் மூலம், 5 லட்சம் மகளிருக்கு 25,000 மானியத்துடன் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மாவட்ட வாரியாக மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுள்ளனர்.. இந்த பணி நிறைவடைந்த பின்னர் அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும்..” என்று தெரிவித்தார்..



