மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் படி, ஆப்பிள், சாம்சங், விவோ, ஓப்போ போன்ற அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தாங்கள் விற்பனை செய்யும் புதிய மொபைல்களில் அரசு உருவாக்கிய “Sanchar Sathi” என்ற சைபர் பாதுகாப்பு செயலியை கட்டாயமாக முன்பே நிறுவி வைக்க வேண்டும். இந்த உத்தரவை 90 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் Sanchar Saathi செயலியை பயன்படுத்துவது கட்டாயமில்லை; பயனர்கள் விரும்பினால் அதை தங்களின் மொபைலில் இருந்து நீக்கலாம் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். மேலும் “ Sanchar Saathi வேண்டாமென்றால், நீக்கலாம். இது முற்றிலும் விருப்பத்திற்குரியது… இந்த செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது எங்கள் கடமை. அதை போனில் வைத்திருக்க வேண்டுமா இல்லையா என்பது பயனரின் முடிவு.” என்று தெரிவித்தார்..
அதே நேரத்தில், இந்தியாவில் மொபைல்கள் தயாரிக்கும் ஆப்பிள், சாம்சங், கூகுள், விவோ, ஓப்போ, சியோமி போன்ற முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் இந்த அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டியதாக இருக்கும்.
ஏற்கனவே விற்பனையில் உள்ள சாதனங்கள்:
இந்தியாவில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள மொபைல் சாதனங்களில், தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது இறக்குமதியாளர்கள் சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் Sanchar Saathi ஆப்பை கட்டாயமாக சேர்க்க வேண்டும்.
அனுசரிப்பு அறிக்கை:
அனைத்து மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் மற்றும் இறக்குமதியாளர்களும், DoT (தொலைத்தொடர்பு துறை) வெளியிட்ட உத்தரவு வந்த நாளிலிருந்து 120 நாட்களுக்குள் தங்கள் அனுசரிப்பு (compliance) அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
பயனாளர் பார்க்கும் வசதி :
DoT, மொபைல் நிறுவனங்களுக்கு, Sanchar Saathi ஆப் புதிய சாதனத்தை முதலில் பயன்படுத்தும் போது அல்லது செட்டப் செய்யும் போது பயனாளர்களுக்கு தெளிவாகக் காணப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த ஆப்பின் செயல்பாடுகளை பயனாளர்கள் பயன்படுத்த முடியாதபடி மறைத்தல், முடக்கம் அல்லது கட்டுப்படுத்தல் கூடாது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
தண்டனைகள் :
இந்த உத்தரவுகளை பின்பற்ற தவறும் நிறுவனங்களுக்கு, தகவல் தொடர்பு சட்டம் 2023, டெலிகாம் சைபர் பாதுகாப்பு விதிகள் 2024, மற்றும் பிற சம்பந்தப்பட்ட சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொடர்புத் துறை எச்சரித்துள்ளது.
Read More : இனி அனைத்து புதிய செல்போன்களிலும் இந்த செயலியை முன்கூட்டியே நிறுவ அரசு உத்தரவு! ஏன் தெரியுமா?



