கடந்த ஆட்சி காலங்களில் கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்ட காரணத்தினாலேயே, தமிழகத்திற்கு வரவேண்டிய பன்னாட்டு முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றதாக அமைச்சர் அருண்ராஜ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்கியதற்கான காரணம் இங்குள்ள மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். எந்தவொரு திட்டம் தொடங்கப்பட்டாலும் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதே முதலீட்டாளர்கள் பின்வாங்கியதற்கு முக்கியக் காரணம். அதனால் தொழில்துறை முதலீடுகள் அனைத்தும் பக்கத்து மாநிலங்களை நோக்கிப் படை எடுத்தது.
தற்போதைய தவெக அரசின் 2 மாத கால ஆட்சியில் நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகம் நடைபெற்று வருகிறது. இதனால் முதலீட்டாளர்களின் அணுகுமுறை முற்றிலுமாக மாறியுள்ளதாக தெரிவித்தார். இனிவரும் காலங்களில் எந்தவித தடங்கலுமின்றி முதலீடுகள் தானாக தமிழகத்தை நோக்கி வரும் என்றும், இதற்கான சூழல் உருவாகி உள்ளதால் மிக விரைவில் நாட்டின் தலைசிறந்த முதலீட்டு மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், செவிலியர்களின் நலனைக் காக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் கேட்டறிந்ததாக தெரிவித்த அவர், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் செவிலியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சாதகமான நல்ல முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
Read More : Gift உடன் கியூட்டாக வந்த மோப்ப நாய் ராக்கி..!! சாகசங்களை கண்டு ரசித்த முதல்வர் விஜய்..!!



