கர்நாடகா மாநிலம் பெங்களூர் நாகவாடா பகுதியை சேர்ந்தவர் டேனியல் – கலையரசி தம்பதி. இவர்களது மகன் ராகுல்(22). ராகுல் அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
கடும் எதிர்ப்பையும் மீறி கீர்த்தனாவை அழைத்துச் சென்று திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார் ராகுல். தனது பெற்றோரிடம் பேசி, குடும்பத்தினர் ஆதரவுடன் வேளாங்கண்ணிக்கு வந்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று மதம் மாறி, நாகை வேளாங்கண்ணியில் ராகுல் – கீர்த்தனா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, வேளாங்கண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர்.
இந்த தகவலை அறிந்த கீர்த்தனாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் ஏற்று கொள்வதாக கூறிய பெண் வீட்டார் நைசாக பேசி அவர்கள் இருக்கும் இடத்தை கேட்டுக்கொண்டனர். பின்னர், பெங்களூரில் வசிக்கும் கீர்த்தனாவின் குடும்பத்திலிருந்து சுமார் 15 பேர் வேளாங்கண்ணிக்கு கார்களில் விரைந்து வந்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த விடுதியில் உள்ளே நுழைந்து ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி, இளம்பெண் கீர்த்தனாவை அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ராகுல், அவரது தந்தை டேனியல், மாமா பிரகாஷ் மற்றும் அம்மா கலையரசி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு நாகை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பெண்ணின் குடும்பத்தார் சென்ற காரை விரட்டிப் பின்தொடர்ந்தனர். பெங்களுர் தப்பிசெல்ல முயன்ற பெண்ணின் தாய், தந்தை, உறவினர்கள் உள்பட 9 பேரை வேளாங்கண்ணி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: ரூ. 5 ஆயிரம் சேமித்தால் ரூ. 8.5 லட்சம் சொந்தமாக்கிக் கொள்ளலாம்..! வட்டி மட்டும் இவ்வளவா..?



