குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகிறார்.
குடியரசு துணைத்தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தமிழகம் வருகிறார். 3 நாள் பயணமாக தமிழகம் வரும் அவர், கோவை, திருப்பூர், மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அரசுமுறைப் பயணமாக செஷல்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு அதிபர் டாக்டர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். இன்று கோவை திரும்புகிறார். கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர், கோவையில் உள்ள கொடிசியா வர்த்தக மையத்தில் கோவை மக்கள் மன்றத்தின் சார்பில் குடியரசு துணைத்தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
கோவை டவுன்ஹாலின் நகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர், பேரூர் மடத்திற்கு செல்லும் அவர், சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திலும் பங்கேற்கிறார். இன்று மாலை கோவையிலிருந்து திருப்பூர் புறப்பட்டுச் செல்லும் அவர், அங்குள்ள திருப்பூர் குமரன் மற்றும் மகாத்மா காந்தி சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். நாளை திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மதுரை செல்லும் அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்கிறார். 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியிலும் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்கிறார்.



