புகார்கள் வந்தபோது போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல், இரு தரப்பினரையும் அழைத்து காவல் நிலையங்களில் பேச்சுவார்த்தை நடத்துவது “கட்டப் பஞ்சாயத்து நடத்துவதைப் போன்றது” என்று மதுரை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி புகழேந்தி நேற்று (அக்டோபர் 23) விசாரித்தார். அந்த மனுவில், “நான் தல்லாகுளம் பகுதியில் எல். கருப்பையா என்பவரிடம் இருந்து ஒரு குடியிருப்பு நிலத்தை வாங்கினேன். பணம் முழுமையாக கொடுத்தபோதும், கூடுதல் தொகை கேட்டு, ஆவணங்களை வழங்க மறுக்கிறார். மேலும் அதிக வட்டி கேட்டும் தொடர்ந்து தொந்தரவு செய்கிறார். எனவே, காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்தபோது நீதிபதி புகழேந்தி, “இத்தகைய புகார்களில், போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல், புகார்தாரர் மற்றும் எதிர்மனுதாரரை அழைத்து காவல் நிலையத்திலேயே பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான நடைமுறையாகும். இவ்வாறு செய்வது கட்டப் பஞ்சாயத்து நடத்துவதைப் போன்றது” என்று கடுமையாகக் குறிப்பிட்டார்.
அதே சமயம், நீதிபதி மேலும் கூறியதாவது: “ஒரு புகாரின் முதற்கட்ட விசாரணைக்காக காவல் அதிகாரி எந்த நபருக்கும் சம்மன் அனுப்ப இயலாது. முதற்கட்ட விசாரணையின் நோக்கம் என்பது புகாரை ஆராய்வதும், புகார்தாரர் அளித்த ஆதாரங்களை மதிப்பாய்வு செய்வதுமே. குற்றம் தெளிவாகத் தெரியவந்தால், காவல் துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, விசாரணையைத் தொடங்க வேண்டும்.” என்றார்.
மேலும், பிரிவு 173(3) BNSS சட்டத்தின் கீழ், எந்தவொரு விசாரணையும் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) ஒப்புதல் பெற்ற பின் 14 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், விசாரணை முடிவுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி விளக்கமளித்தார். இறுதியாக, மனுதாரர் சோமசுந்தரத்தின் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



