இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால், அதை சரிசெய்ய ஸ்டென்ட் (Heart Stent) பொருத்துவது பொதுவான சிகிச்சை முறையாகும். ஆனால், “ஒருமுறை ஸ்டென்ட் பொருத்திவிட்டால் இனி வாழ்நாள் முழுவதும் மாரடைப்பு வராது” என்று பலர் நினைக்கிறார்கள். இது தவறான நம்பிக்கை என்று இதய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்டென்ட் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. ஆனால், இதய நோயை முழுமையாக குணப்படுத்தாது என்பதே உண்மை.
இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால், அந்த அடைப்பை திறந்து ரத்த ஓட்டம் சீராக செல்ல ஸ்டென்ட் பொருத்தப்படுகிறது. இதனால் உடனடி ஆபத்து குறைந்தாலும், இதய நோய் முழுமையாக குணமாகிவிடும் என்று அர்த்தமல்ல. காலப்போக்கில் மற்ற ரத்த நாள்களிலும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், மீண்டும் மாரடைப்பு வரக்கூடும்.
மருந்து பூசப்பட்ட நவீன ஸ்டென்ட்கள் (Drug-Eluting Stents) தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஸ்டென்ட் பொருத்தப்பட்ட இடத்தில் மீண்டும் அடைப்பு ஏற்படும் அபாயத்தையும், ஸ்டென்ட்டுக்குள் ரத்த உறைவு உருவாகும் அபாயத்தையும் குறைக்கின்றன. இருந்தாலும், இந்த ஆபத்துகள் முற்றிலும் இல்லாமல் போய்விடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஸ்டென்ட் பொருத்திய பிறகு, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக, ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் மருந்துகளை (Blood Thinners) மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நிறுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், மீண்டும் ரத்த உறைவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.
அதேபோல், புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைத்திருக்காதது போன்றவை இதயத்திற்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, மருந்துகளுடன் வாழ்க்கை முறையையும் மாற்றுவது மிகவும் முக்கியம்.
ஸ்டென்ட் பொருத்தியவர்கள் தினமும் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிடுவது, உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதும் இதய ஆரோக்கியத்திற்கு அவசியம்.
ஸ்டென்ட் பொருத்திய பிறகு இந்த 5 விஷயங்களை மறக்காதீர்கள்:
- மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எந்தக் காரணத்திற்காகவும் தானாக நிறுத்த வேண்டாம்.
- புகைப்பிடித்தல் மற்றும் அனைத்து வகையான புகையிலைப் பொருட்களையும் முழுமையாக தவிர்க்க வேண்டும்.
- தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ராலை தவறாமல் பரிசோதிக்க வேண்டும்.
- நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், அதிக வியர்வை அல்லது இடது கை, தோள், தாடைக்கு வலி பரவுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
ஸ்டென்ட் பொருத்துவது இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிறந்த சிகிச்சைகளில் ஒன்றாக இருந்தாலும், அது மீண்டும் மாரடைப்பு வராது என்பதற்கான உத்தரவாதம் அல்ல. மருத்துவர் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுவது, மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்வது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதுதான் இதயத்தை நீண்ட காலம் பாதுகாக்கும் சிறந்த வழி என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Also Read: ஒரே மாதத்தில் 5 கிலோ வரை உடல் எடை குறையணுமா?… தினமும் 45 நிமிடம் நடந்தாலே போதும்!



