தோல் புற்றுநோயான மெலனோமாவுக்கு எதிராக மாடர்னா (Moderna) மற்றும் மெர்க் (Merck) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள தனிப்பயனாக்கப்பட்ட mRNA தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மெர்க்கின் புகழ்பெற்ற நோய் எதிர்ப்புச் சிகிச்சை மருந்தான கேய்ட்ருடா (Keytruda) உடன் இந்த புதிய mRNA தடுப்பூசியைச் சேர்த்து வழங்கியபோது, நோயாளிகளிடம் மிகச்சிறப்பான பலன்கள் கிடைத்துள்ளன.
முக்கிய அம்சங்கள்: இக்கட்டப் பரிசோதனையில் (INTerpath-001) அறுவை சிகிச்சை மூலம் கட்டிகள் முழுமையாக அகற்றப்பட்ட நிலை IIB முதல் IV வரையிலான 1,137 மெலனோமா நோயாளிகள் பங்கேற்றனர்.
முதல் நிலை: கீய்ட்ருடா மருந்துடன் இந்த mRNA தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு புற்றுநோய் மீண்டும் திரும்புவதற்கான ஆபத்து கணிசமாகக் குறைந்துள்ளது.
இரண்டாம் நிலை இலக்கு வெற்றி: புற்றுநோய் உடலின் பிற பகுதிகளுக்கு பரவுவதைத் தடுப்பதிலும் (Distant metastasis-free survival) இந்த இணை சிகிச்சை சாதகமான முடிவுகளைத் தந்துள்ளது.
பாதுகாப்புத் தன்மை: இந்த இணை சிகிச்சையானது ஏற்கெனவே அறியப்பட்ட பக்க விளைவுகளைத் தவிர, வேறு புதிய பாதுகாப்புப் பிரச்சினைகள் எதையும் ஏற்படுத்தவில்லை என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தனிப்பயனாக்கப்பட்ட mRNA புற்றுநோய் தடுப்பூசி என்றால் என்ன?
வழக்கமான தடுப்பூசிகள் தொற்றுகளைத் தடுக்கப் பயன்படுகின்றன; ஆனால், இந்தத் தடுப்பூசி ஒவ்வொரு தனிநபரின் உடலிலும் உள்ள கட்டியின் பிரத்யேக மரபணு மாற்றங்களை (Genetic mutations) ஆராய்ந்து உருவாக்கப்படுகிறது. நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டதும், அதன் டிஎன்ஏ வரிசைப்படுத்தப்பட்டு, புற்றுநோய் செல்களை அடையாளம் காணும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை இந்தத் தடுப்பூசி பயிற்றுவிக்கிறது. இதன் மூலம் உடலின் சொந்த நோய் எதிர்ப்பு சக்தியே புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடத் தூண்டப்படுகிறது.
மருத்துவ உலகிற்கு இதன் முக்கியத்துவம் என்ன?
தனிப்பயனாக்கப்பட்ட நியோஆன்டிஜென் (Neoantigen) சிகிச்சையிலும், mRNA அடிப்படையிலான புற்றுநோய் சிகிச்சையிலும் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட முதல் மூன்றாம் கட்டப் பரிசோதனை இதுவாகும்.
மெலனோமா வெற்றியைத் தொடர்ந்து, நுரையீரல் புற்றுநோய், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் போன்ற பிற கட்டிகளையும் குணப்படுத்தும் ஆராய்ச்சிகளில் மாடர்னாவும் மெர்க்கும் ஈடுபட்டுள்ளன.
விரைவில் நடைபெறவுள்ள சர்வதேச மருத்துவ மாநாட்டில் விரிவான தரவுகள் வெளியிடப்படவுள்ளதுடன், மருந்து ஒழுங்குமுறை அதிகாரிகளிடம் ஒப்புதலுக்கான அனுமதிகளும் கோரப்படவுள்ளன. இந்த ஆய்வின் தொடர்ச்சியாக நோயாளிகளின் ஒட்டுமொத்த ஆயுள் நீட்டிப்பு குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதால், இது புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.



