சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். இனி இதுபோன்ற கருத்துகளை பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, தனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக ஏற்கனவே மன்னிப்பு கேட்டதாகவும், தற்போது மீண்டும் உளமாற வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
மேலும், தன்னை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண்ணிடமும் ஏற்கனவே தனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்கும் சூழல் நிச்சயம் ஏற்படாது என்றும் பொன்முடி தெரிவித்தார்.
முன்னதாக, நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது பெண்கள் குறித்து சைவம், வைணவம் தொடர்பான ஒப்பீட்டுடன் பொன்முடி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரிடம் இருந்த அமைச்சர் பதவியும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பும் பறிக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து மறுநாள், ஆகஸ்ட் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பின்னர் அவருக்கு எதிரான பிடிவாரண்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், தனது சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மீண்டும் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து பொன்முடி மன்னிப்பு கேட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.



