சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல கவுன்சில் மாநாட்டில், நதிநீர் உரிமைகள், நியாயமான நிதிப்பகிர்வு, நீட் விலக்கு மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மிக விரிவாகவும் ஆணித்தரமாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் சதீசன், தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்கா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற இந்த மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தென் மாநிலங்கள் மட்டுமே 30 சதவீத பங்களிப்பை வழங்கி நாட்டின் முதன்மைப் பொருளாதார எஞ்சினாக திகழ்வதாக சுட்டிக்காட்டினார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்தித் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை நீதிமன்ற உத்தரவின்படி 152 அடியாக உயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதேபோல், கிராமப்புற மற்றும் எளிய பின்னணி கொண்ட மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட்டு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசிடம் திட்டவட்டமாக கோரினார்.
குறிப்பாக, மக்கள் தொகையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததற்காக தென் மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் தங்களது பிரதிநிதித்துவத்தை இழந்துவிடக் கூடாது என்றும், தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளின் போது தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையாது என்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இவற்றுடன், மாநிலங்களின் நிதி தன்னாட்சியை மதிக்கும் வகையில் உரிய நிதிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும், பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையை ஒசூர் வரை நீட்டிக்க வேண்டும், மாநிலங்களுக்கு இடையேயான தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டும் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மாநிலங்களுக்கிடையே கூட்டுப் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்மொழிவுகளையும் அவர் முன்வைத்தார்.



