தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த போண்டா மணியை ஏமாற்றி ரூ.1 லட்சம் பணத்தை சுருட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ் திரைப்படங்களில் பல்வேறு காமெடி கதாபாத்திரத்தில் நடித்த போண்டாமணி என அழைக்கப்படும் கோடீஸ்வரன், சென்னை ஐயப்பன் தாங்கலில் வசித்து வருகிறார். கடந்த வாரம் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் பிரதீப் என்பவர் போண்டாமணியிடம் வந்து நலம் விசாரிப்பது போல் நெருக்கமாக பழகி உள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார் போண்டா மணி. அப்போது, வீட்டிற்கு செல்லும் வழியில் போண்டாமணி செலவிற்கு பணம் வேண்டும் என்பதால் அவருடன் இருந்த ராஜேஷ் பிரித்திவிடம் அவரது ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து வர சொல்லி அனுப்பி உள்ளார். ஆனால், சில மணி நேரங்கள் ஆகியும் அவர் திரும்பாத காரணத்தினால் சந்தேகமடைந்த போண்டாமணி அவரது வங்கிக் கணக்கில் சோதித்தபோது, 1,04,941 ரூபாய்க்கு உம்முடி பங்காரு நகைக்கடையில் நகை எடுத்துள்ளதாக எஸ்எம்எஸ் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து போண்டாமணியின் மனைவி மாதவி சென்னை போரூர் எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நேற்று ராஜேஷ் பிரதீப்பை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருப்பூரைச் சேர்ந்தவர் என்றும் இவர் மீது ஏற்கெனவே கோவை மாவட்டத்தில் 2 வழக்குகளும், சென்னை எழும்பூரில் 2 வழக்குகளும் உள்ளதாக தெரியவந்தது. இவர் தினேஷ், சிவராம், குரு, தீனதயாளன், ராஜேஷ், பெருமாள் என்ற மற்றொரு பெயர்களுடன் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது. விசாரணைக்கு பின்பு அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.