‘ஏகே 62’ படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘வலிமை’ படத்திற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 3-வது முறையாக நடிகர் அஜித் இணைந்துள்ளப் படம் ‘ஏகே 61’. இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. மஞ்சு வாரியர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹைதராபாத், சென்னை என விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த மாதத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்காலிகமாக ‘ஏகே 62’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முதலில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது அஜித் ஜோடியாக நடிக்க, ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அஜித் ஒன்றாக நடித்திருந்தாலும், ஜோடியாக நடிக்கவில்லை. இந்தப் படம் தோல்வியடைந்ததற்கு இதுவும் காரணமாக கூறப்பட்டது.
இந்நிலையில், ‘ஏகே 62’ படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், ‘ஏகே 62’ படத்தை பெரும் பொருட்செலவில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனை அஜித் சந்தித்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். தற்போது கதை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.