சூது கவ்வும் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மனமதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். கடந்தாண்டில் அதிக தமிழ் படங்களில் நடித்த ஹீரோவும் அசோக் செல்வன் தான். தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.
குறிப்பாக பா.ரஞ்சித் தயாரிக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் அசோக். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இதில் அவருடன் சாந்தனுவும் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். இதுதவிர நெஞ்சமெல்லாம் காதல் என்கிற படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இப்படி பிஸியான நடிகராக வலம் வரும் அவருக்கு, விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அசோக் செல்வனுக்கு தற்போது 33 வயது ஆகிறது. அவர் பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலித்து வருகிறாராம். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதால், விரைவில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அசோக் செல்வன் காதலிக்கும் அந்த பெண் தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். அந்த பெண் யார் என்பதை நெட்டிசன்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.