நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு காமெடி நடிகரின் சினிமா அறிமுகத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார். 80-களின் இறுதியில் இருந்து நகைச்சுவை மன்னன் கவுண்டமணி இல்லாத திரைப்படங்களே இல்லை என்னும் அளவிற்கு தமிழ் சினிமா மாறிவிட்டது. கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி காட்சிகள் தான் ஒரு படம் வெற்றி பெறுவதற்கு காரணம் என்பது போல் அப்போதைய நிலைமை இருந்தது.
கவுண்டமணியை பற்றி நிறைய பேர் பேட்டிகளில் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். திரைக்கு முன் அவர் எவ்வளவு சிரிக்க வைக்கிறாரோ அதைவிட பல மடங்கு சீரியஸாக திரைக்குப்பின் இருப்பாராம். அதே நேரத்தில் கவுண்டமணிக்கு எல்லாம் நாம் தான் என்ற எண்ணமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்திருக்கிறது. இது அவருடைய சக நடிகர்கள் மற்றும் அப்போதைய இயக்குனர்களுக்கு சரிப்பட்டு வரவில்லை.
அதே காலகட்டத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் தான் ராஜ்கிரண். கவுண்டமணி போன்ற ஒரு நடிகரை தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பது இவருக்கு ரொம்பவும் சிரமமாக இருந்திருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று திட்டம் தீட்டிய ராஜ்கிரண், களத்தில் இறக்கியதுதான் வைகைப்புயல் வடிவேலு. அவரை காமெடி நடிகராக அறிமுகமாக்கியது மட்டுமல்லாமல் பாடவும் வைத்திருந்தார்.
வடிவேலுவும் சினிமாவுக்குள் அறிமுகமாகிய காலகட்டத்தில் கவுண்டமணியின் மூலம் நிறைய இன்னல்களை சந்தித்ததாக அப்போது அவருடன் இருந்த நடிகர்கள் சொல்லி இருந்தார்கள். கவுண்டமணி மற்றும் செந்தில் காம்போவில் வரும் நகைச்சுவை காட்சிகளில் ஏதாவது ஒரு சின்ன கேரக்டரில் வந்து போவார் வடிவேலு. கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
ஒரு சில வருடங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் காமெடி நடிகராக மாறினார் வடிவேலு. அதே நேரத்தில் சின்ன கலைவாணர் விவேக் வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருந்ததால், இவர்கள் இருவரது கூட்டணியில் நிறைய படங்கள் வெற்றி பெற்றன. கவுண்டமணியின் கொட்டத்தை அடக்க அறிமுகப்படுத்தப்பட்ட வடிவேலு, அவரே ஒரு காலகட்டத்தில் உச்சகட்ட நடிகராக மாறும்பொழுது ஓவராக ஆடியதாக தற்போது அவரிடம் கூட பயணித்த சக நடிகர்கள் சொல்லி வருகிறார்கள்.