அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அந்தவகையில், இப்படத்தின் முதல் பாடலான ‘வந்த இடம்’ ஏற்கனவே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் அடுத்த பாடலான ‘ஹையோடா’ பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஷாருக்கான் தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். அதில், ஒரு ரசிகர் ஷாருக்கானிடம் “என்னுடைய காதலிக்காக, ஜவான் படத்தின் இலவச டிக்கெட் ஒன்றை எனக்கு நீங்கள் வழங்க முடியுமா?, நான் ஒரு வீணாப்போன காதலன்” எனக் கூறியுள்ளார்.
இதற்கு ஷாருக்கான், “நான் அன்பை மட்டுமே இலவச அடிப்படையில் வழங்குபவன். காதல் என வரும்போது, அதில் மலிவான நபராக நடந்து கொள்ளாதீர்கள். போய் டிக்கெட் வாங்குங்கள். பின்னர், உங்கள் காதலியையும் அழைத்து செல்லுங்கள்” என பதிலளித்து உள்ளார்.