இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், தளபதி 67 படம் தொடங்கும் முன்பே படம் குறித்த தகவல்கள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2023 ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 67 என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில்ம் தற்போது தளபதி 67 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தளபதி 67 படத்தில் நடிக்க விஷாலிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிரபல ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்களான மார்வெல் மற்றும் DC அவரவர்களுக்கென தனி திரை உலகத்தை உருவாக்கி ரசிகர்களை தங்கள் பக்கம் கவர்ந்து, அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த முறையை பின்பற்றி தற்போது லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் LCU என்னும் முறையை பின்பற்றி வருகிறார். தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக கெளதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் என பெரிய படையே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல நாயகிகள் லிஸ்டில் திரிஷா, சமந்தா இருவரும் உள்ளனர். இவர்கள் தவிர பிக்பாஸ் பிரபலங்கள் மற்றும் மலையாள இளம் நடிகரான மேத்யூ தாமஸ் உள்ளிட்ட மேலும் பலரும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

விக்ரம் படத்தை போலவே தளபதி 67 படமும் மிகப்பெரிய மல்டி ஸ்டார் படமாக இருக்கும் எனவும், இது லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லிஸ்டில் தற்போது விஷாலும் இணைந்துள்ளார். அதே நேரத்தில் கார்த்தி, கமல், சூர்யா உள்ளிட்டவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தளபதி 67 படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தற்போதே சமூக வலைத்தளங்களில் இந்த படம் பேசு பொருளாக மாறி வருகிறது. மாஸ்டர், விக்ரம் படங்களை போல இந்த படமும் லோகேஷ் கனகராஜ்க்கு வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.