ரசிகர்கள் பல நாட்களாகக் கேட்டுவந்த கேள்விக்கு தற்போது இயக்குநர் கௌதம் மேனன் அளித்த பதில் ‘வேட்டையாடு விளையாடு-2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் ‘வேட்டையாடு விளையாடு’. இப்படத்தில் கமலுடன் கமலினி முகர்ஜி, ஜோதிகா, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் கௌதம் மேனனிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்தனர். இதற்கு ஏற்கனவே பதிலளித்துள்ள அவர், வேட்டையாடு விளையாடு பாகம் இரண்டிற்கான கதை வைத்திருப்பதாகவும், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், இத்தகவல் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகியும் இதற்கான முன்னெடுப்புகள் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் தொடர்ந்து இயக்குனர் கௌதமிடம் பலமுறை கேட்டுவந்தனர். ஆனால் லாக்டவுன், தேர்தல் எனப் பல காரணங்களால் கமல்ஹாசனிடம் வேட்டையாடு விளையாடு கதை குறித்து கவுதம் மேனன் பேச இயலாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கௌதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து ‘வெந்து தணிந்தது காடு’ எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 2) பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

இவ்விழாவிற்கு கமல்ஹாசனைச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழா மேடையில் பேசிய கமல்ஹாசன், ”படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே வேட்டையாடு விளையாடு-2 படத்திற்கான கதையைக் கேட்டு என் சம்மதத்தை கௌதம் மேனனிடம் தெரிவித்துவிட்டேன். ஆனால், இடையில் கொரோனா வந்துவிட்டது. எனவே, முழுக்கதை என்னை வந்தடையவில்லை” என்றார். பின்னர் நிகழ்ச்சியிலேயே விளக்கமளித்த இயக்குநர் கௌதம் மேனன், ‘வேட்டையாடு விளையாடு-2′ படதிற்கான கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிக் கொண்டிருக்கிறார். முழுக்கதையும் விரைவில் கமல்ஹாசனுக்கு வந்து விடும் என்று தெரிவித்தார்.

ரசிகர்கள் பல நாட்களாகக் கேட்டுவந்த கேள்விக்கு தற்போது கௌதம் அளித்த பதில் ‘வேட்டையாடு விளையாடு-2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, வேட்டையாடு விளையாடு – 2 படத்தின் முதற்கட்ட பணிகளில் இயக்குநர் கௌதம் மேனன் இருப்பதாகவும், அடுத்த ஆண்டில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.