டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா மாநிலத் தலைவர் ஜி கிஷன் ரெட்டி, தேசிய பொதுச்செயலாளர் தருண் சங்க் ஆகியோர் முன்னிலையில் நடிகை ஜெயசுதா, பாஜகவில் இணைந்து கொண்டார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ஜெயசுதா, சுமார் 50 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த பொங்கலுக்கு வெளியான நடிகர் விஜய்யின் ’வாரிசு’ படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். 1972ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். 1973இல் பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ‘பாண்டியன்’, ‘ராஜகுரு’, ‘அபூர்வ ராகங்கள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்னர், 1975 முதல் இந்திய திரையுலகில் உச்சம் தொட்டார்.
இந்நிலையில், நடிகை ஜெயசுதா முதல் கணவரைப் பிரிந்த நிலையில், தயாரிப்பாளர் நிதின் கபூரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உடல்நிலையால் பாதிக்கப்பட்டிருந்த நிதின் கபூர், கடந்த 2017ஆம் ஆண்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். பிறகு சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்த ஜெயசுதா, மீண்டும் எண்ட்ரி ஆனார். அந்த வகையில், விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்தும் நடித்தும் வருகிறார். அதேநேரத்தில் அவர் அரசியலில் களம் இறங்கியுள்ளார்.
முன்னதாக, கடந்த 2009இல் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 2014 தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். பின்னர் 2016இல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு அவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி தனது மகனுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது, பாஜகவில் இணைந்துள்ளார்.
முன்னதாக, ஜெயசுதாவை பாஜகவில் இணையும்படி, அக்கட்சியில் அங்கம் வகிக்கும் பலரும் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஜெயசுதா, சில நிபந்தனைகளை வைத்துள்ளார். அதன் பயனாகத்தான் தற்போது அவர் பாஜகவில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு சீட்டு வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர், செகந்திராபாத் தொகுதியிலேயே மீண்டும் களமிறக்கப்படுவார் என தகவல் கூறுகின்றன.
பாஜகவில் இணைந்தது குறித்து நடிகை ஜெயசுதா கூறுகையில், “பிரதமர் மோடியின் தலைமையில் இந்த நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். இன்று நாம் நம் நாட்டைவிட்டு வெளியே செல்லும்போது, மக்கள் இந்தியாவைப் பற்றி பேசுகிறார்கள். இன்று நாம் இப்படி இருப்பதே பிரதமர் மோடியால்தான்” எனத் தெரிவித்துள்ளார்.