20 பேர் பலி..! பல கட்டிடங்கள் இடிந்து சேதம்..! கொலம்பியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!

colombia earthquake 3

கொலம்பியா நிலநடுக்கம்: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டின் மேற்கு பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


நிலநடுக்கத்தின் மையப்பகுதி சோகோ (Chocó) பிராந்தியத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல்வேறு நகரங்களில் உணரப்பட்டதுடன், வெனிசுலா உள்ளிட்ட அண்டை பகுதிகளிலும் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

பெரேரா நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தில் பெரேரா நகரில் 18 பேரும், மணிசாலெஸ் பகுதியில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் காலி (Cali), குய்ப்டோ (Quibdó), மணிசாலெஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளில் விமான நிலைய செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொலம்பியா அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மீட்பு பணிகளை அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேதம் குறித்த விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Newsnation_Admin

You May Like