தருமபுரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025-2026ஆம் ஆண்டில் 11, 12ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 11, 12ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 14.10.2025 அன்றும், தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 15.10.2025 அன்றும் நடைபெறவுள்ளன.
கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு தலா முதல் பரிசாக ரூ.10000/- இரண்டாம் பரிசாக ரூ.7000/- மூன்றாம் பரிசாக ரூ.5000/- என வழங்கப்படும். ஒரு பள்ளி/கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று மாணவர்களை மட்டும் தெரிவு செய்து உரிய படிவத்துடன் மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்/கல்லூரி முதல்வர் அனுப்ப வேண்டும். மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9.00 மணிக்குள் வருகையைப் பதிவு செய்திடல் வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய படிவத்தை நிறைவு செய்து போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் கொடுத்திடல் வேண்டும். தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்கள் / அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.