பச்சிளங் குழந்தைகளின் பிறவியிலேயே ஏற்படும் பாத குறைபாடுகளுக்கான மருத்துவப் பயிற்சி ஜிப்மர் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்கால பாத நோயான கிளப்-ஃபூட் உலக அளவில் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது. இந்த வகை குறைபாடுகளுக்கு முதன்மை மருத்துவ சிகிச்சையான “பொன்செட்டி முறை” ஆகும். இந்த முறையில் அறுவைச் சிகிச்சை ஏதுமின்றி பிளாஸ்டர் போடுவதன் மூலம், மேற்கொள்ளப்படும் சிகிச்சை பச்சிளங்குழந்தைகளின் பாதங்களை 6 முதல் 7 வாரகாலத்தில் குணப்படுத்த முடியும்.
இந்தப் பிளாஸ்டர் சிகிச்சைக்குப் பிறகு, குழந்தைகள் 4 முதல் 5 வயது வரையில் “சிடிஇவி” சிறப்பு வகை காலணிகள் மற்றும் பட்டைகளை அணிவது அவசியமாகும். இதனை நீண்ட காலம் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்த சிகிச்சையை முறையாகப் பின்பற்றாவிடில், பாதக்குறைபாடும் மீண்டும் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இத்தகைய சூழலில் மீண்டும் ஒருமுறை பிளாஸ்டர் போடுதல் அல்லது சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நிலை ஏற்படுகிறது.
அண்மையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை எலும்பியல் அறுவைச் சிகிச்சை துறை, பச்சிளங் குழந்தைகளின் பாதக்குறைபாடுகள் என்ற தலைப்பில், கிளப்-ஃபூட் குறைபாட்டின் முழுமையான சிகிச்சையை மேற்கொள்ள ஏதுவாக தொடர் மருத்துவக் கல்வி மற்றும் செயல்முறைப் பயிலரங்கை நடத்தியது. இதில் 42 முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர். பிளாஸ்டர் சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து பட்டை அணிய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இந்தப் பயிலரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.