இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கூட்டுறவு வங்கி மூழ்கியுள்ளது. இதனால், அடகு வைக்கப்பட்ட நகைகள், பணம், ஆவணங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. கனமழை மட்டும் பெய்யவில்லை. மேகவெடிப்பு, நிலச்சரிவும் ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 23 வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 16 நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேகவெடிப்பு, மழை வெள்ளம் காரணமாக மண்டி மாவட்டத்தில் உ்ள துனாங் நகரில் உள்ள மாநில கூட்டுறவு வங்கி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் வங்கி செயல்பட்டு வந்தது. மழை வெள்ளத்தால் வங்கியின் ஒரு கதவு முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இரண்டு கதவுகள் வளைந்து சேதமடைந்துள்ளது. மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகள் மற்றும் கட்டிட இடிபாடுகள், சகதிகள் முதல் தளத்தை முற்றிலுமாக மூடியுள்ளது. இதனால் வங்கியில் உள்ள லட்சக்கணக்கான பணம் மற்றும் அடகு வைத்திருந்த நகைகள் என்னவானது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
துனாங்கில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஏராளமான வணிகர்கள், விவசாயிகள் கணக்கு வைத்துள்ளனர். தினசரி வரவு, செலவு மேற்கொண்டு வந்துள்ளனர். 8 ஆயிரம் மக்களுக்கு இந்த ஒரு வங்கிதான் எனக் கூறப்படுகிறது. இதனால் ஏராளமான பணம் மட்டும் இல்லாமல், அடது வைத்த நகைகள் ஏராளமான இருக்கும் என கருதப்படுகிறது. கதவு இல்லாமல் சகதியில் மூழ்கிக் கிடக்கும் வங்கியில் இருந்து நகைகளை கொள்ளையடிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இடிபாடுகளை அகற்றிய பிறகுதான் சேதம் குறித்து முழு விவரம் தெரியவரும்.