தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதிகார மட்டத்திலான ஊழலை வேரறுக்க, சிங்கப்பூர் நாட்டை பின்பற்றி மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் விஜய்யை ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “சர்வதேச அளவில் சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பெருமளவிலான ஊழல் குற்றங்களுக்கு எவ்வித பாரபட்சமுமின்றி மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் சமரசமின்றி அமல்படுத்தப்பட்டு வருவதை சுட்டிக் காட்டினார்.
இந்தியச் சூழலில் நிர்வாகத் தூய்மையை உறுதி செய்ய இருமுனை உத்திகளைக் கையாள வேண்டும். முதலாவதாக, அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணி அதிகாரிகளின் ஊதிய விகிதத்தைப் பெருமளவில் உயர்த்த வேண்டும். இரண்டாவதாக, ஊதிய உயர்விற்குப் பின்னரும் அதிகார மட்டத்தில் எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு ஊழல் குற்றத்திற்கும் மரண தண்டனையே இறுதித் தீர்வாக விதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், கடந்த காலத் தவறுகளை மட்டுமே முடிவின்றி விவாதித்துக் கொண்டிருப்பதைத் தவிர்த்து, பழைய குற்றங்களுக்கு உரிய சட்ட விதிகளின்படி பொது மன்னிப்பு அறிவிக்கலாம் என்று கூறியுள்ளார். உரிய சட்ட நடைமுறைகள் மற்றும் முறையான ஆய்வுகளுக்குப் பிறகு நீதிமன்றங்கள் இத்தண்டனைகளைத் துரிதமாக அமல்படுத்த வேண்டும் என்றும், சட்ட நடைமுறை என்ற பெயரில் வழக்குகள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தார். நவீன சிங்கப்பூரை உருவாக்கிய லீ குவான் யூவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அணுகுமுறையைக் கற்றுக்கொண்டு, சிங்கப்பூர் நீதிமன்றங்களின் அதிவேகத் திறனை நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.



