இந்து சமய அறநிலையத்துறையின் இந்த நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு படி, திருமுறைகளை குறைவின்றி ஓதிட ஏதுவாக இக்கோயிலில் புதியதாக ஓதுவார் பயிற்சிப் பள்ளி பகுதி நேர வகுப்பாக தொடங்கப்படுகிறது. அந்த வகையில் வடபழனி முருகன் கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 13-ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ஓதுவார் பயிற்சி பள்ளியில் பயிற்சி காலம் நான்கு ஆண்டுகள். பகுதி நேர வகுப்புகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை அல்லது இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடத்தப்பட உள்ளது. மேலும், வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநேர வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இந்த ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கு 14 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓதுவார் பயிற்சி பெற விரும்புவோர் இந்து மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். சமயக் கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் படிப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும், ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இயற்கையாகவே சாரீரமும், உடல் வளமும் பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் ஆகியோரை கொண்டு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானோர் வடபழனி முருகன் கோயிலில் நேரிலோ, இந்து சமய அறநிலையத்துறையின் www.tnhrce.gov.in மற்றும் www.vadapalaniandavar.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் வரும் அக்.13-ம் தேதிக்குள் துணை ஆணையர்/ செயல் அலுவலர், வடபழனி முருகன் கோயில், வடபழனி, சென்னை-600 026 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.