தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு https://www.tngasa.in என்ற முகவரியில் 30-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான பதிவு, விண்ணப்ப கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்தல் மற்றும் அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் நேற்றுடன் முடிந்த நிலையில் மே 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் இதுவரை 2,25,705 பேர் விண்ணப்பம். 1,82,762 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த இணைய தளமான https://www.tngasa.in மூலம் பதிவு செய்யலாம். தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,25,345 சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணவர்கள் விண்ணப்பங்களை வீட்டில் இருந்தோ அல்லது அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உருவாக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். பாடப் பிரிவுகள் மற்றும் கல்லூரிகளை விரும்பும் வரிசையில் பதிவு செய்ய வேண்டும். தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில் வெளியிடப்படும்.