சப்த கன்னிகளுள் ஒருவராகத் திகழும் வாராகி அம்மன், உருவத்தில் மாறுபட்டிருந்தாலும் தாய்மை நிறைந்த உள்ளம் கொண்ட தெய்வம். துயரத்தோடு தன்னை நாடி வருபவர்களின் துன்பங்களைப் போக்கி, அவர்களுக்கு அருள்புரியும் அற்புதமான சக்தி கொண்டவள் இந்த அன்னை. வாராகி அம்மனை நினைத்து பஞ்சமி திதியில் நாம் மேற்கொள்ளும் ஒரு சிறப்பான வழிபாடு, நம்முடைய துயரங்கள் அனைத்தையும் நீக்கிவிடும் என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன. கடன், நிம்மதியின்மை, தொடர் தோல்விகள் எனப் பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனிதர்களுக்கு, இந்த வழிபாடு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
வாராகி அம்மனை வழிபடுவதற்கு உகந்த நாளாக வளர்பிறை பஞ்சமி திதி கருதப்படுகிறது. இந்த நாளில் அவரை மனதார வணங்கினால், நாம் வைக்கும் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. பஞ்சமி திதியில் வீட்டில் வாராகி அம்மன் திருவுருவப் படம் வைத்திருப்பவர்கள், அதற்கு முன் ஒரு அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். படம் இல்லாதவர்கள், வாராகி அம்மனுக்காக ஒரே ஒரு அகல் விளக்கு ஏற்றி, அந்த தீபத்தையே அன்னையாக பாவித்து வழிபாட்டைத் தொடங்கலாம்.
இந்த வழிபாட்டின்போது, அன்னைக்கு கிழங்கு வகைகளை நெய்வேத்தியமாகப் படைக்கலாம். அல்லது கற்கண்டு சேர்த்து நன்றாகக் காய்ச்சிய பாலையும் நிவேதனமாக வைக்கலாம். மேலும், செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்கள் வாராகி அம்மனுக்கு மிகவும் பிடித்தவை என்பதால், அவற்றை மாலையாகத் தொடுத்து அணிவிக்கலாம் அல்லது விளக்குக்கு அருகில் வைத்து வழிபடலாம்.
வாராகி அம்மனை மனமுருக நினைத்து, பஞ்சமி திதியில் இந்தச் சிறப்பு வாய்ந்த மூட்டையைக் கட்டி வைக்க வேண்டும். இதற்கு ஒரு சிறிய பச்சை நிறத் துணியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், மூன்று ஏலக்காய், மூன்று கிராம்பு, மூன்று மிளகு, ஒரு விரலி மஞ்சள் மற்றும் ஒரு வசம்பு ஆகியவற்றை வைக்க வேண்டும். பிறகு, பச்சை நிற நூலைக் கொண்டு இந்தத் துணியை முடிச்சாகக் கட்ட வேண்டும். இந்த முடிச்சைக் கட்டும்போது, உங்களைத் துயரப்படுத்தும் அனைத்துப் பிரச்சனைகளும் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
இப்படி வேண்டிய பிறகு, உங்கள் கோரிக்கைகளை அன்னை வாராகி அம்மனிடம் உருக்கமாகச் சொல்லி, அவரது திருவுருவப் படத்தின் அருகில் இந்த மூட்டையை வைத்துவிட வேண்டும். இந்த வழிபாட்டிற்குப் பிறகு, உங்கள் வீட்டின் அருகில் வாராகி அம்மன் ஆலயம் இருந்தால், அங்கு சென்று தரிசனம் செய்து வருவது மேலும் சிறப்பைச் சேர்க்கும். தினசரி பூஜை செய்யும்போதும், இந்த மூட்டைக்கு ஊதுவத்தி காட்டி, வாராகி அன்னையை மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வது, உங்கள் துயரங்கள் அனைத்தையும் நீக்கி, வாழ்வில் நிம்மதி அளிக்கும் என்பது ஐதீகம்.
Read More : தக்காளி விலை கடும் உயர்வு!. கிலோ ரூ.700க்கு விற்பனை!. ஆப்கானிஸ்தானுடனான மோதலால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி!



