மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் கட்டணமே வசூலிக்கப்படும். இதர பேருந்துகளைப் போல சிங்காரச் சென்னை பயண அட்டை, ரூ.1000 பயண அட்டை, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். பேருந்துகளை மின்னேற்றம் செய்வதற்கான கட்டுமான பணிகள், பராமரிப்பு கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.47.50 கோடியில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சார பேருந்து பணிமனையையும் திறந்து வைத்தார்.
சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின்கீழ், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் 625 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மத்திய பணிமனை, வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூவிருந்தவல்லி, தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகள் மூலம் மொத்த விலை ஒப்பந்த அடிப்படையில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில், உலக வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் கட்டணமே வசூலிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதர பேருந்துகளைப் போல சிங்காரச் சென்னை பயண அட்டை, ரூ.1000 பயண அட்டை, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.