மக்கள் பிரதிநிதியை ‘பிச்சைக்காரன்’ என இழிவுப்படுத்துவதா? இபிஎஸ்-க்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

selvaperunthagai eps

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.. தனது சுற்றுப்பயணத்தின் பேசிய அவர் “ காங்கிரஸ் கட்சி நூற்றாண்டு கண்ட கட்சி.. அப்படிப்பட்ட கட்சி திமுகவிற்கு அடிமையாக உள்ளது.. இப்படி அடிமைத்தனமாக இருப்பது காங்கிரஸ் தான்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பல கட்சிகளில் இருந்து வந்தவர்.. பிச்சைக்காரர்களின் ஒட்டுப்போட்ட சட்டை மாதிரி, இவர் பல கட்சிக்கு போயிட்டு வந்தவர்.. எந்தக் கட்சிக்கு போவாரோ அந்தக் கட்சியின் கொள்கைகளை பற்றி பேசுபவர் தான் செல்வப்பெருந்தகை.. கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் எங்களுக்கு கூடுதல் இடம் வேண்டும் எனவும், ஆட்சியில் பங்கு வேண்டும் எனவும் கே.எஸ்.அழகிரி பேசினார்.. ஆனால் செல்வப்பெருந்தகை ராகுல்காந்தியே ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.. நீங்கள் கேட்காதீர்கள்.. உண்மையிலேயே அவர் காங்கிரஸ் கட்சி தொண்டனாக இருந்தால் அந்த எண்ணம் வந்திருக்குமா? அவருக்கு அந்த எண்ணம் இல்லை. திமுகவை தாங்கிப் பிடிக்கும் நபராக செல்வப்பெருந்தகை இருக்கிறார்.. அவர் காங்கிரஸுக்கு விசுவாசமாக இல்லை.. திமுகவுக்கு தான் விசுவாசமாக இருக்கிறார்..” என்று பேசியிருந்தார்..


இந்த நிலையில் இபிஎஸ்-ன் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ‘பிச்சைக்காரன்’ என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். இத்தகைய விஷம கருத்து, எவ்வளவு ஆழமாக அரசியலில் சமூக விரோத எண்ணங்கள் புதைந்துள்ளன என்பதையும், உண்மையான சிரமங்களை அறியாத செழிப்பின் அகந்தையையும் வெளிப்படுத்துகிறது. மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் பாதையில் பயணித்து, விளிம்புநிலை மக்களின் வாக்குகளால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், இறுதியில் ஊர்ந்து சென்று முதல்வராகவும் ஆனீர்கள்.

ஆனால், இன்று மக்களின் வலிகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் தூரத்தில் நிற்கிறீர்கள். டெல்லியில் முகத்தை மறைத்துக் கொண்டு, வேறொருவரின் சொகுசு பென்ட்லி காரில் (Bentley) பயணிக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு எப்படி இந்த நாட்டின் ஏழைகள் எதிர்கொள்கின்ற துயரங்களும் நெருக்கடிகளும் தெரியும், புரியும்? என்னை ‘பிச்சைக்காரன் – ஒட்டு போட்ட சட்டை’ என்று அழைக்கும் போது, என்னை மட்டுமல்ல, எளிமையான நிலைமையில் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் மரியாதையையும் மதிப்பையும் இழிவுபடுத்துகிறீர்கள். நான் கிழிந்த துணி அணிந்திருந்தாலும், அந்த துணியில் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களின் கண்ணீர், கனவுகள், நம்பிக்கைகள் உள்ளன.

விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், என் அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன. அவர்கள் சுயமரியாதைக்கும், அன்றாட வாழ்வுப் போராட்டத்திற்கும் நான் கடமைப்பட்டவன். அந்த மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல. எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா.?.” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

கர்ப்ப காலத்தில் முருங்கைக்காய் சாப்பிடுறீங்களா..? இது தெரிஞ்சா இனி தொடவே மாட்டீங்க..!

Thu Sep 25 , 2025
Do you eat drumsticks during pregnancy? If you know this, you will never touch them again!
Drumstick

You May Like