நாட்டில் வெப்பத்தால் ஏற்படும் இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும் என்றும் உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை தடுக்க 2050 ஆம் ஆண்டுக்குள் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் இதற்கு 2.4 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. தற்போது மழை வெள்ளத்தால் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும், இது 2070 ஆம் ஆண்டுக்குள் 14-30 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் அறிக்கை கூறுகிறது.
பெரும்பாலும் நகர்ப்புற விரிவாக்கம், வெள்ள அபாயம் மற்றும் வெப்ப பாதிப்பு உள்ள பகுதிகளில் நடைபெறுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. டெல்லி, சென்னை, சூரத், லக்னோ போன்ற நகரங்கள் அதிக வெப்ப அலை மற்றும் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகியுள்ளன. வெப்பம் தொடர்பான இறப்புகள் 2050க்குள் ஆண்டுக்கு 1.44 லட்சத்தில் இருந்து 3.28 லட்சத்திற்கும் மேல் உயரக்கூடும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
எனவே இந்த அபாயங்களைத் தடுக்க, 2050க்குள் 2.4 டிரில்லியன் டாலரும், 2070க்குள் 10.9 டிரில்லியன் டாலரும் வீட்டு வசதி, போக்குவரத்து, கழிவு மேலாண்மை போன்ற துறைகளில் முதலீடு செய்யப்பட வேண்டும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்தியா GDPயில் 0.70% மட்டுமே நகர்ப்புற உள்கட்டமைப்பில் செலவிடுகிறது. இது மற்ற நாடுகளை விடக் குறைவாகும்.