சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே, ஆழிமதுரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், தொடக்கப் பள்ளியும், அதே வளாகத்தில் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப் பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவரின் எட்டு வயது மகள் சோபிகா 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும், அங்குள்ள அங்கன்வாடியில் கண்ணன் என்பவரின் நான்கு வயது மகள் கிருஷ்மிதா படித்து வந்துள்ளார்.
நேற்று காலை வழக்கம் போல் இரண்டு சிறுமிகளும் தங்களின் வகுப்பிற்கு சென்றுள்ளனர். பின்னர் மதிய உணவு இடைவேளைக்காக சிறுமிகளின் பெற்றோர் பள்ளியில் இருந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல சென்றுள்ளனர். ஆனால் அப்போது இரண்டு சிறுமிகளும் தங்களின் வகுப்பில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்களின் குழந்தைகளை எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர்.
அப்போது, இரண்டு சிறுமிகளும் பள்ளியின் எதிரே உள்ள கண்மாயில் சடலமாக மிதந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், கதறி துடித்துள்ளனர். மேலும், பள்ளி நேரத்தில் வளாகத்தை விட்டு சிறுமிகள் வெளியே சென்றது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளனர். அதைத்தொடர்ந்து, ஆசிரியர்களின் அலட்சியத்தால் தான் தங்களது குழந்தைகள் உயிரிழந்ததாக வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதையடுத்து, உயிரிழந்த சிறுமிகளின் சடலத்தை பள்ளியின் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வகுப்பில் இருந்த ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிறுமிகளின் குடும்பத்திற்கு நிவாரணமும் அரசு வேலை வழங்கக் கோரியும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், உயரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் தாய்மேரி, ஏற்கெனவே பணி ஓய்வு பெற்ற நிலையில், ஓராண்டு பணி நீடிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அங்கன்வாடி பணியாளரான தினேஷ் அம்மாளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காலையில் பள்ளிக்கு சென்ற குழந்தைகள், மதியம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: பிரியாணிக்கு ஆசைப்பட்ட 75 வயது மூதாட்டி; வீட்டிற்க்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த வாலிபர்.