16 வயது சிறுமியை காதலிக்க சொல்லி மிரட்டிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர், நேற்று மாலை பெருமாள் கோயில் தெருவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை பார்ப்பதற்காக அவரது உறவினருடன் வந்துள்ளார். பின்னர் சுவாமி தரிசனம் செய்து விட்டு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது காந்தி சிலை அருகே சிறுமி சென்ற வாகனத்தை வழிமறித்த, திண்டிவனம் தியாகி சண்முகப்பிள்ளை தெருவைச் சேர்ந்த அஸ்கர் என்பவர், சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். மேலும், காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சிறுமியின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அஸ்கர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.