தனது மகள் காதலிக்கும் விஷயம் தெரிந்து எச்சரிக்கை விடுத்தும் மகள் தன் பேச்சை கேட்காததால் கழுத்தை நெறித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி அருகே தாழையூத்து அருகே பாலமடை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி, சென்னையில் டிரைவராக வேலை பார்க்கின்றார். இவரது மனைவி ஆறுமுக கனி இவர்களது மகள் அருணா(19). இவர் கோவையில் நர்சிங் படித்து வந்தார். சமீபத்தில் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று நள்ளிரவு ஆறுமுக கனி வீட்டில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால், அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது அருணா மயங்கி கிடந்துள்ளார். ஆறுமுகக்கனி வாயில் நுரையுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதைக் கண்டு அதிர்ந்து போன மக்கள் அவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு கழுத்து நெறிக்கப்பட்டதால் அருணா உயிரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்தனர். ஆறுமுக கனியை பரிசோதித்தபோது அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக சீவலப்பேரி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அருணா கல்லூரியில் ஒரு இளைஞரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதனால் நடந்த சண்டையில் அருணாவை கழுத்தை நெறித்தே கொலை செய்திருக்கின்றார். பின்னர் தானும் இறந்துவிட முடிவு செய்து விஷம் குடித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயே மகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.