செய்வினை வைத்ததால்தான் தனக்கு 45 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என நினைத்து மூதாட்டியைக் கொலை செய்தவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஒத்தக்குதிரை, கே.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 88 வயதான சரஸ்வதி. இவருக்கு 70 வயதில் சுகுமார் என்ற மகனும், 68 வயதில் ராதா என்ற மகளும் உள்ளனர். சுகுமார் கோபி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் வசித்து வருகிறார். கணவர் இறந்ததால் சரஸ்வதி தனது சொந்த ஊரான கோபியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் அதிகாலை வழக்கம்போல் எழுந்து வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர் சரஸ்வதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பின்னர், சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்து அவரது உறவினர்கள் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். தகவலறிந்த கோபி போலீசார் சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சரஸ்வதியை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான பாலுசாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோபி காவல் நிலையத்தில் சரணடைந்த பாலுசாமியின் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், சரஸ்வதி அதே பகுதியில் கோயில் கட்டி பஜனை மற்றும் வழிபாடு நடத்தி வந்துள்ளார். சரஸ்வதி செய்வினை வைத்ததால்தான் தனக்கு 45 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை என்று பாலுசாமி நினைத்துள்ளார். அந்த ஆத்திரத்தில் இருந்த அவர் சரஸ்வதியை வெட்டிக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் பாலுசாமியை கைது செய்தனர்.